Wednesday, July 30, 2008

கோபப் பரிசு…

யார் மீதோ கொட்டமுடியாத
உன் கொந்தளிப்புகளை எல்லாம் என்மேல் ஏற்றி…

ஒட்டுமொத்த கோபத்தியும் வார்த்தைப் புயலாக்கி
என்மேல் எறிகிறாய் !

அதற்குக்கூட உனக்கு
உரிமையானவள் நானென்பதால்
அதிலிருந்து எனக்கான தென்றலை மட்டும்
எடுத்துக்கொள்கிறேன் !

கோபம் தணிந்தபின் நீ வந்து கெஞ்சும்
கொஞ்சல்களுக்கு பரிசளிக்க அவை தேவைப்படும்…

காதல் கடிதம்…


விடிய விடிய பக்கம் பக்கமாய்
எழுதிக்கொண்டுவந்து கொடுத்தபின்னும்
எதையோ விட்டுவிட்டதைபோல்
திருப்தியின்மை எனக்கு !


திரும்பத் திரும்ப திருப்பித் திருப்பி
படித்து முடித்த பின்னும்
மீண்டும் மீண்டும் படித்து ரசிக்க
இன்னும் இன்னும் நேரம் வேண்டும் உனக்கு !

Saturday, July 26, 2008

கனவுகளின் இளைப்பாறுதல்…


உன் உறக்கத்தில் மெல்ல நுழையும்
என் அழகான கனவுகள் இளைப்பாற
உன் தலையணையின் ஓரத்தில்
கொஞ்சம் இடம் விட்டுத் தூங்கு…

நீ விடும் சுவாசத்தினால்
உன் தனி வாசத்தினால்
அது இன்னும் அழகாகக்கூடும்
என்னைப் போல !

Thursday, July 24, 2008

நமக்கான விடியல்கள்…

இலட்சியம் சுவாசித்து கொள்கையை நேசித்து
வெற்றியை நீ காதலி !

முயற்சி வாள்கொண்டு திறமைப் போர்செய்து
தோல்வியை நீ தோற்க்கடி !

கற்றது கையளவு உள்ளது கடலளவு
எப்போதும் பசியாயிறு !

உனக்கும் பொறுப்புண்டு உணர்ந்தால் சிறப்புண்டு
வரலாற்றில் உன் பேர் நடு !

இனிவரும் விடியல்கள்
உனக்கென உனக்கென விடியட்டும் !

இனிவரும் காலங்கள்
உன் புகழ் உன் புகழ் உரைக்கட்டும் !

Monday, July 21, 2008

காதலின் இரை…


எங்கோ நீயும் எங்கோ நானும் இருந்தபடி…
இந்த இரவினில் இனிக்க இனிக்க
பேசிக்கொள்ளவும் கதைகள் சொல்லவும்
பசி கொண்டலையும் நம் கண்களுக்கு…

அதோ அங்கு தொலைவில் மின்னும்
ஏதோ ஒரு நட்சச்திரத்தில்
கிடைக்கக்கூடும் இரை !

Friday, July 18, 2008

என்ன செய்கிறாய் என்னை …


நீ கொடுத்த கடிதங்கள், பரிசுப்பொருட்கள்…
நாம் இதுவரை சந்தித்த நாட்கள்…
போட்ட சண்டைகள்…
என்று அனைத்தையும் கணக்கு தவறாது
சின்னக் குழந்தை தனது மிட்டாய்களை
எண்ணி எண்ணிப் பார்ப்பதைப்போல
கணக்கு வைத்திருக்கிறேன் எனக்குள்ளே !


இந்த பொல்லாத முத்தங்களை மட்டும்
எப்பொழுதும் எண்ணிவிட முடிவதில்லை…

ஹேய்... அப்பொழுது மட்டும்
என்னை என்ன செய்கிறாய் நீ…

Wednesday, July 16, 2008

பெண்மைக்கான ரகசியம்…

சொல்ல முடியாத
பெண்மைக்கான ரகசியங்களைக்கூட
முழுதாய் பகிர்ந்துகொள்கிறேன் உன்னிடம்…


உடல்களைத் தாண்டிய
பிணைப்புகளுக்கான புரிதல்களுக்கு
நீ உன் முகம் தந்துகொண்டிருப்பதால்…

சுகமான பொழுதுகள்…


ராத்திரிக்குள் அகப்பட்ட
நிலவைப் போல…

கூந்தலுக்குள் அகப்பட்ட
பூக்கள் போல…

கோவிலுக்குள் அகப்பட்ட
கடவுள் போல…

கருவறைக்குள் அகப்பட்ட
குழந்தை போல…

உன் நினைவுகளுக்குள்
அகப்பட்ட பொழுதுகள்
எத்தனை சுகமானவை !

ரகசிய வார்த்தைகள்…

யாருக்கும் தெரியாத
சொன்னாலும் புரியாத
ரகசிய வார்த்தைகள்
சேமித்து வைத்திருக்கிறேன் உனக்காய்…


காதோரம் சொன்னதும்
கன்னத்துக் குழி விழ
வெட்கிச் சிரிப்பாய் நீ எனக்கே எனக்காய் !

பிரிவின் வலி…


எந்த நிமிடத்திலும்
நீ உடைந்து அழுதுவிடக்கூடும்
எனும் காதல் பயத்தோடு…

அவசியத்தோடு அவசரமாக பிரிந்து
அவஸ்தையோடு பயணிக்கிறேன் நான் !

பறவையின் பாடல் !


எப்போதும் தொடர்கின்ற
சாதனைப் பயணத்தில்
வெற்றிகளும் தோல்விகளும்
நித்தம் நித்தம் யுத்தம் செய்து
பலமுறை வெற்றிகளும் சிலமுறை தோல்விகளும்
வெற்றித் தோல்விகளை
மாறி மாறி சந்தித்துக்கொண்டிருக்கும்…

அந்த மழைக்கால வேளையில்
போதிமரக்கிளையில்
நண்பர்களோடு சேர்ந்து
நினைவுகளை கொத்தித் தின்றபடி
கவலை அறியா ஒரு ரகசியப் பறவையாய்
இசையோடு அமர்ந்திருக்கிறேன்
எனக்கேயான பாடல்களை
எல்லோருக்குமாய் பாடியபடி…


பிரியனின் வணக்கங்கள்...

பிரியன்... தமிழ்த் திரைப்பட பாடலாசிரியன் பிரியனாக என்னைத் தங்களிடம் அறிமுகம் செய்துகொள்வதில் மகிழ்கிறேன்...

இனி இந்த தளத்தில் கவிதைகளைப் பற்றியும், தமிழ் இலக்கியம் பற்றியும், திரைப்பட பாடல்கள் பற்றியும், மற்ற பல படைப்பாக்க சிந்தனைகளைப் பற்றியும் பிரியமுடன் பகிர்ந்துகொள்ள வருகிறேன்...

தங்கள் விமர்சனங்களும் கருத்துக்களும் நிச்சயம் இந்த பக்கங்களை அழகாக்கும் எனும் நம்பிக்கையோடு...

பிரியமுடன்...

பிரியன்...


பிரியமானவர்களுக்கு பிரியனின் வணக்கங்கள்...

ஒரு படைப்பாளியாக தங்களை எனது பக்கங்களுக்கு வரவேற்கிறேன்...

கவிதைகளின் பல முகங்களையும், இலக்கியத்தின் பல தடங்களையும், தமிழ் திரைப்படத்துறை பாடல்களின் பல பரிமாணங்களையும் பகிர்ந்துகொள்ள இருக்கும் இந்த களத்தில்...


தங்களின் கருத்துக்களும் விமர்சனங்களும் பக்க பலமாக இருக்கும் எனும் நம்பிக்கையோடு...

பிரியமுடன்...
பிரியன்...