Thursday, January 5, 2012

முன்நோக்கி..அடியேனது இதர பதிவுகளை இந்த தளத்தில் கண்டு கருத்துரையுங்கள்..
 
 
 
 
நன்றி... 

Tuesday, December 8, 2009

வார்த்தைகளில் வாழ்பவன்…

கடிகார முள்ளைப்போல்

ஒரு நொடிகூட நில்லாமல்

உன்னை எண்ணியே ஓடிக்கொண்டிருக்கும்

என் நினைவுக் குதிரைக்கு

பாசக் கடிவாளமிட்டு

அதன்மேல் ஒய்யாரமாய்

பயணம் செய்கிறாய்…பள்ளத்தில் பாயும்

நதியின் சலசலப்பைப்போல்

ஓயாமல் எப்போதும்

எதையாவது பேசிக்கொண்டிருக்கும் நீ…சட்டென சிலநாள்

பாசி படிந்த குளம்போல்

மௌனித்திடும் பொழுது

மரண பயம்கொண்டு

ஸ்தம்பித்து போகின்றன என் நாட்கள்…புதிதாய் பொம்மை கிடைத்த மகிழ்ச்சியில்

அதோடு ரசித்து ரசித்து விளையாடி

பின் மெல்ல மெல்ல ஆர்வம் குறைந்து

அதை ஓரமாய் வைத்துவிட்டு ஓடிப்போகும்

குழந்தையின் மனநிலையில்

ஒருவேளை விழுந்துவிட்டாயோ என நான்

அறிய முற்படுகையில்…முரட்டு வார்த்தைகளால்

என்னை முறித்துப் போடுகிறாய்…
உன் சின்ன சின்ன வரிகள்

என்னை சீக்கிரம்

சாகடிக்கத் தொடங்கும் முன்…வானமளவு நிறைந்து

பூமியையே பகிர்ந்து

பூக்களைப்போல் திறந்து

மற்றதெல்லாம் மறந்து

நாம் பேசிய பழகிய நாட்களில்

உனக்கு தெரியவில்லையா…

நான் வார்த்தைகளில் வாழ்பவன் என்று…

 

Wednesday, December 10, 2008

சரியான பிழை…

சுவாரஸ்யமாக என்னுடன் நீ

பேசிக்கொண்டிருக்கும் வேளையில்…சட்டென ஏதும்

வார்த்தைப் பிழை நேர்ந்தால்…மென்மையாய் நுனி உதட்டை கடித்தபடி…

மெதுவாய் தலையில் தட்டிக்கொள்வாய்…பின் மீண்டும் சுவாரஸ்யமாகும்

பேச்சுக்கிடையில்…அடுத்து வரப்போகும்

உன் செல்லப் பிழைகளுக்காகவே

ஆவலுடன் காத்திருப்பேன் நான் !

ஜாடை மாடையாய்…

கூட்டமிக்க பேருந்து நிலையத்தில்

தோழிகள் கூட்டத்திற்கு நடுவில்

நீ நின்றுகொண்டிருக்கையில்…உன்னைத் தேடி நான்

வந்துவிட்டதை கண்டதும்

யாருக்கும் தெரியாமல்

என்னுடன் ஜாடையில் பேசிக்கொண்டிருப்பாய்…நானும் ஜாடையிலேயே

கிண்டலாய் ஒன்று சொல்ல

சட்டென்று சிரித்துவிடுவாய்…புரியாமல் என்னவெனக் கேட்கும்

உன் தோழிகளிடம் நீ

“சீ சும்மா இருங்கடி…” என

செல்லமாய் அதட்டியபடி

தலையை குனிந்துகொள்ளும் பொழுதும்…உன்னை சீண்டி கிண்டல் செய்யும்

நெருக்கமான தோழியை

மென்மையாய் கிள்ளும் பொழுதும்…துள்ளிக் கொண்டு வந்து நிற்கும்

வெட்கத்தில் சிவந்த முகத்தில்

சிக்கித் திணறுகிறது

என் மேல் நீ கொண்ட காதல் !

Tuesday, December 9, 2008

இன்னொரு முத்தம்…

ஒரு வேகத்தில்

அழுத்தி வைத்துவிட்ட முத்தத்தில்…

காயமாகிப்போன உன் உதடுகளை

மிருதுவாய் தடவிக்கொண்டே…

“சீ போ… உன்னால வீட்ல மாட்டிக்கப்போறேன்…”

என செல்லமாய் நீ கோபித்துக்கொள்ளும்

அந்த பொழுதில்தான்…

இறுக்கி வைக்கத் தோன்றுகிறது

இன்னொரு முத்தம் !

Monday, December 8, 2008

பதில் இல்லை என்னிடம்…

வெள்ளிக்கிழமை தாவணி… விழாநாள் சேலை…

எப்பொழுதாவது கட்டும் பட்டுப்புடவை…

நெற்றியில் சின்ன குங்குமக் கீறல்…

விரல்கள் மடித்த மல்லிகைப் பூக்கள்…சட்டையில் ஒட்டிக்கொள்ளும் ஸ்டிக்கர் பொட்டுக்கள்…

தெறித்து விழும் வளையல் துண்டுகள்…

காதுக்குள் மழை தூறும் கொலுசொலி…இவைகளை எல்லாம் பிடித்ததினால்

உன்னை எனக்கு பிடித்திருக்கிறதா !

அல்லது…

உன்னை எனக்கு பிடித்ததினால்

இவைகளெல்லாம் பிடிக்கின்றனவா என்பதற்கு

என்றும் பதில் இல்லை என்னிடம்…

 

கனவுகளின் இளைப்பாறுதல்…

உன் உறக்கத்தில் மெல்ல நுழையும்

என் அழகான கனவுகள் இளைப்பாற

உன் தலையணையின் ஓரத்தில்

எனக்கும் கொஞ்சம் இடம் விட்டுத் தூங்கு…நீ விடும் சுவாசத்தினால்

உன் தனி வாசத்தினால்

அது இன்னும் அழகாகக்கூடும்

என்னைப் போல !

Monday, August 25, 2008

மகிழ்ச்சியான தருணம்...

பிரியமானவர்களுக்கு பிரியனின் வணக்கங்கள்...


20/08/08 - ரசிக்கும் சீமானே...
22/08/08 - பந்தயம்...
24/08/08 - மேகம்...

எனத்தொடர்ந்து எனது பாடல்களோடு மூன்று படங்களின் இசை வெளியீடு வரிசையாக நிகழ்ந்திருக்கிறது...


1. ரசிக்கும் சீமானே படத்தில் அழகான இரண்டு மெல்லிசைப் பாடல்கள்...


2. பந்தயம் படத்தில் நல்ல மெல்லிசைப் பாடல்...
3. மேகம் படத்தில் மூன்று பாடல்கள்...

பாடல்கள் மீதான தங்கள் விமர்சனங்கள் கிடைக்கட்டும்...

பிரியமுடன்...
பிரியன்...

காதலின் திவலைகள்….

பார்த்துக்கொண்டிருக்கும் போதே
கலைந்து போகும் மேகங்கள்போல்…

பேசிக்கொண்டிருக்கும் போதே
சின்னச் சின்ன சண்டைகள் இட்டு
என்மேல் பொய்க்கோபம் கொண்டு
முகத்தை அந்த பக்கம் திருப்பிக்கொண்டு
சற்று விலகி நடக்கிறாய்…


உன்னை என்ன சொல்லி
சமாளிப்பதெனத் தெரியாமல்
நான் மௌனத்தில் ஆழ்ந்திருக்கையில்…


சட்டென எங்கிருந்தோ வந்த மழை
நம்மை நனைக்க முற்பட…


ஓடி வந்து உன் துப்பட்டாவிற்க்குள் நுழைந்தபடி
எனக்கும் குடை பிடிக்கிறாய்…


இதுவரை இருந்த கோபமெல்லாம்
எங்கே என நான் கேட்பதைப்போல்
உனையே உற்றுப் பார்க்க…


மெல்ல கண்களை உருட்டி
பார்வைகளை வேறு பக்கம்
அலைய விடுகிறாய் !


தொடர்ந்து உன்மீது
நுழைந்துகொண்டிருக்கும்
என் பார்வைகளின் கனம் தாங்காமல்…
உன் கண்களை மெல்ல மூடிக் கொள்கிறாய் !


என் சூடான மூச்சுக்காற்று வெப்பம்
உடலுக்குக்கருகில் பட்டு
உன் இதழ்களில்
உன்னை அறியாமல் மலர்கிறது
ஒரு குட்டிப் புன்னகை !


ஏதும் பேசாத அந்த ஈர நேரத்தில்…
தொலைந்து போன கோபத்தை சுத்தமாய் மறந்து…


கொட்டும் மழையில்
சொட்டச் சொட்ட
உன் துப்பட்டாவிற்க்குள் குடி புகுந்திருக்கும்
நம்மை சுற்றிலும்…


மௌனமாய் விழுந்துகொண்டிருக்கின்றன
காதலின் திவலைகள்….

தொட்டுவிடும் தூரத்தில்...

உன் முகக் கண்களைப் பார்த்திட்டபின்
என் நகக் கண்களும் பார்வை பெறும் !

உன் நிழல் என்மீது விழுகையிலே
என் நிஜம் பொய்யோடு போட்டியிடும் !

உன் பளீர் புன்னகை தாக்கிட என்மேல்
சுளீர் சுளீரென வலியெடுக்கும் !

உன் உடை இடை ஜடை இழுக்கையில் எல்லாம்
குடை பிடிக்கும் மழை எனை நனைக்கும் !

சலக் சலக்கென்று அசைகின்ற இமை நெஞ்சை
சரக் சரக்கென்று கிழித்தெறியும் !

தடக் தடக் என துடிக்கின்ற இதயம்
படக் படக்கென்று முறிந்து விழும் !

முழு எடை குறைந்து உடல் காற்றில் எழும்..
என் பெயர் மறந்து உயிர் உன்னைத் தொழும் !

தொட்டுவிடும் தூரத்தில்
வெட்கி நீ நிற்கையில்…வரிசையான வசனகவிதைகளுக்கு இடையில் கொஞ்சம் சந்தமிட்டு பார்க்கலாமெனத் தோன்றியது…

பிரியமானவர்களுக்கு பிரியனின் வணக்கங்கள்...

ஒரு படைப்பாளியாக தங்களை எனது பக்கங்களுக்கு வரவேற்கிறேன்...

கவிதைகளின் பல முகங்களையும், இலக்கியத்தின் பல தடங்களையும், தமிழ் திரைப்படத்துறை பாடல்களின் பல பரிமாணங்களையும் பகிர்ந்துகொள்ள இருக்கும் இந்த களத்தில்...


தங்களின் கருத்துக்களும் விமர்சனங்களும் பக்க பலமாக இருக்கும் எனும் நம்பிக்கையோடு...

பிரியமுடன்...
பிரியன்...