Wednesday, December 10, 2008

சரியான பிழை…

சுவாரஸ்யமாக என்னுடன் நீ

பேசிக்கொண்டிருக்கும் வேளையில்…



சட்டென ஏதும்

வார்த்தைப் பிழை நேர்ந்தால்…



மென்மையாய் நுனி உதட்டை கடித்தபடி…

மெதுவாய் தலையில் தட்டிக்கொள்வாய்…



பின் மீண்டும் சுவாரஸ்யமாகும்

பேச்சுக்கிடையில்…



அடுத்து வரப்போகும்

உன் செல்லப் பிழைகளுக்காகவே

ஆவலுடன் காத்திருப்பேன் நான் !

ஜாடை மாடையாய்…

கூட்டமிக்க பேருந்து நிலையத்தில்

தோழிகள் கூட்டத்திற்கு நடுவில்

நீ நின்றுகொண்டிருக்கையில்…



உன்னைத் தேடி நான்

வந்துவிட்டதை கண்டதும்

யாருக்கும் தெரியாமல்

என்னுடன் ஜாடையில் பேசிக்கொண்டிருப்பாய்…



நானும் ஜாடையிலேயே

கிண்டலாய் ஒன்று சொல்ல

சட்டென்று சிரித்துவிடுவாய்…



புரியாமல் என்னவெனக் கேட்கும்

உன் தோழிகளிடம் நீ

“சீ சும்மா இருங்கடி…” என

செல்லமாய் அதட்டியபடி

தலையை குனிந்துகொள்ளும் பொழுதும்…



உன்னை சீண்டி கிண்டல் செய்யும்

நெருக்கமான தோழியை

மென்மையாய் கிள்ளும் பொழுதும்…



துள்ளிக் கொண்டு வந்து நிற்கும்

வெட்கத்தில் சிவந்த முகத்தில்

சிக்கித் திணறுகிறது

என் மேல் நீ கொண்ட காதல் !

Tuesday, December 9, 2008

இன்னொரு முத்தம்…

ஒரு வேகத்தில்

அழுத்தி வைத்துவிட்ட முத்தத்தில்…

காயமாகிப்போன உன் உதடுகளை

மிருதுவாய் தடவிக்கொண்டே…

“சீ போ… உன்னால வீட்ல மாட்டிக்கப்போறேன்…”

என செல்லமாய் நீ கோபித்துக்கொள்ளும்

அந்த பொழுதில்தான்…

இறுக்கி வைக்கத் தோன்றுகிறது

இன்னொரு முத்தம் !

Monday, December 8, 2008

பதில் இல்லை என்னிடம்…

வெள்ளிக்கிழமை தாவணி… விழாநாள் சேலை…

எப்பொழுதாவது கட்டும் பட்டுப்புடவை…

நெற்றியில் சின்ன குங்குமக் கீறல்…

விரல்கள் மடித்த மல்லிகைப் பூக்கள்…



சட்டையில் ஒட்டிக்கொள்ளும் ஸ்டிக்கர் பொட்டுக்கள்…

தெறித்து விழும் வளையல் துண்டுகள்…

காதுக்குள் மழை தூறும் கொலுசொலி…



இவைகளை எல்லாம் பிடித்ததினால்

உன்னை எனக்கு பிடித்திருக்கிறதா !

அல்லது…

உன்னை எனக்கு பிடித்ததினால்

இவைகளெல்லாம் பிடிக்கின்றனவா என்பதற்கு

என்றும் பதில் இல்லை என்னிடம்…

 

கனவுகளின் இளைப்பாறுதல்…

உன் உறக்கத்தில் மெல்ல நுழையும்

என் அழகான கனவுகள் இளைப்பாற

உன் தலையணையின் ஓரத்தில்

எனக்கும் கொஞ்சம் இடம் விட்டுத் தூங்கு…



நீ விடும் சுவாசத்தினால்

உன் தனி வாசத்தினால்

அது இன்னும் அழகாகக்கூடும்

என்னைப் போல !

பிரியமானவர்களுக்கு பிரியனின் வணக்கங்கள்...

ஒரு படைப்பாளியாக தங்களை எனது பக்கங்களுக்கு வரவேற்கிறேன்...

கவிதைகளின் பல முகங்களையும், இலக்கியத்தின் பல தடங்களையும், தமிழ் திரைப்படத்துறை பாடல்களின் பல பரிமாணங்களையும் பகிர்ந்துகொள்ள இருக்கும் இந்த களத்தில்...


தங்களின் கருத்துக்களும் விமர்சனங்களும் பக்க பலமாக இருக்கும் எனும் நம்பிக்கையோடு...

பிரியமுடன்...
பிரியன்...