Monday, August 25, 2008

மகிழ்ச்சியான தருணம்...

பிரியமானவர்களுக்கு பிரியனின் வணக்கங்கள்...


20/08/08 - ரசிக்கும் சீமானே...
22/08/08 - பந்தயம்...
24/08/08 - மேகம்...

எனத்தொடர்ந்து எனது பாடல்களோடு மூன்று படங்களின் இசை வெளியீடு வரிசையாக நிகழ்ந்திருக்கிறது...


1. ரசிக்கும் சீமானே படத்தில் அழகான இரண்டு மெல்லிசைப் பாடல்கள்...


2. பந்தயம் படத்தில் நல்ல மெல்லிசைப் பாடல்...
3. மேகம் படத்தில் மூன்று பாடல்கள்...

பாடல்கள் மீதான தங்கள் விமர்சனங்கள் கிடைக்கட்டும்...

பிரியமுடன்...
பிரியன்...

காதலின் திவலைகள்….

பார்த்துக்கொண்டிருக்கும் போதே
கலைந்து போகும் மேகங்கள்போல்…

பேசிக்கொண்டிருக்கும் போதே
சின்னச் சின்ன சண்டைகள் இட்டு
என்மேல் பொய்க்கோபம் கொண்டு
முகத்தை அந்த பக்கம் திருப்பிக்கொண்டு
சற்று விலகி நடக்கிறாய்…


உன்னை என்ன சொல்லி
சமாளிப்பதெனத் தெரியாமல்
நான் மௌனத்தில் ஆழ்ந்திருக்கையில்…


சட்டென எங்கிருந்தோ வந்த மழை
நம்மை நனைக்க முற்பட…


ஓடி வந்து உன் துப்பட்டாவிற்க்குள் நுழைந்தபடி
எனக்கும் குடை பிடிக்கிறாய்…


இதுவரை இருந்த கோபமெல்லாம்
எங்கே என நான் கேட்பதைப்போல்
உனையே உற்றுப் பார்க்க…


மெல்ல கண்களை உருட்டி
பார்வைகளை வேறு பக்கம்
அலைய விடுகிறாய் !


தொடர்ந்து உன்மீது
நுழைந்துகொண்டிருக்கும்
என் பார்வைகளின் கனம் தாங்காமல்…
உன் கண்களை மெல்ல மூடிக் கொள்கிறாய் !


என் சூடான மூச்சுக்காற்று வெப்பம்
உடலுக்குக்கருகில் பட்டு
உன் இதழ்களில்
உன்னை அறியாமல் மலர்கிறது
ஒரு குட்டிப் புன்னகை !


ஏதும் பேசாத அந்த ஈர நேரத்தில்…
தொலைந்து போன கோபத்தை சுத்தமாய் மறந்து…


கொட்டும் மழையில்
சொட்டச் சொட்ட
உன் துப்பட்டாவிற்க்குள் குடி புகுந்திருக்கும்
நம்மை சுற்றிலும்…


மௌனமாய் விழுந்துகொண்டிருக்கின்றன
காதலின் திவலைகள்….

தொட்டுவிடும் தூரத்தில்...

உன் முகக் கண்களைப் பார்த்திட்டபின்
என் நகக் கண்களும் பார்வை பெறும் !

உன் நிழல் என்மீது விழுகையிலே
என் நிஜம் பொய்யோடு போட்டியிடும் !

உன் பளீர் புன்னகை தாக்கிட என்மேல்
சுளீர் சுளீரென வலியெடுக்கும் !

உன் உடை இடை ஜடை இழுக்கையில் எல்லாம்
குடை பிடிக்கும் மழை எனை நனைக்கும் !

சலக் சலக்கென்று அசைகின்ற இமை நெஞ்சை
சரக் சரக்கென்று கிழித்தெறியும் !

தடக் தடக் என துடிக்கின்ற இதயம்
படக் படக்கென்று முறிந்து விழும் !

முழு எடை குறைந்து உடல் காற்றில் எழும்..
என் பெயர் மறந்து உயிர் உன்னைத் தொழும் !

தொட்டுவிடும் தூரத்தில்
வெட்கி நீ நிற்கையில்…



வரிசையான வசனகவிதைகளுக்கு இடையில் கொஞ்சம் சந்தமிட்டு பார்க்கலாமெனத் தோன்றியது…

இடைவெளி நிரப்புதல்....

ஒற்றைக்கால் கொக்கின் மூக்கைப்போல்
நீண்டிருக்கும் தனிமையின்
இடைவெளியை நிரப்ப..

இன்றாவது நீ வருவாய் என
முனைப்போடு ஒவ்வொரு நொடியும்
ஒய்யாரமாய் தவமிருக்கிறது
எனது மனது…



சிவந்த தாமரைப் பூவாய்
பிறந்த பிள்ளைப் பாதமாய்
ரகசிய வெட்கம் சிந்தும்
உன் பெண்மைக்கு
இந்த பிரபஞ்சத்தையே பரிசளிக்கலாம்…


சிலந்தி வலையென சிக்குண்டிருக்கும்
எனது நினைவுகளின் மேல் அமர்ந்து
புன்னகையால் வீணை மீட்டுகிறாய்…


ஒரே ஒருமுறை மட்டும்
என்மேல் விழும்
உன் ஒற்றைப் பார்வைக்கு
ஒட்டுமொத்த உயிரையும்
உறிஞ்சிக் குடித்துவிடும் சாமர்த்தியம் இருக்கிறது…


எப்பொழுதாவது என்னை நீ
பிரிய முற்படும் சமயங்களில்
உன் புன்னகைகளையும்முத்தங்களையும்
என் உதடுகளுக்கு கொடுத்துச் செல்ல
தவறுவதே இல்லை…


அந்த இனிப்பு முத்தங்களையும்
குறும்பு புன்னகைகளையும்
என் உதடுகளில் பத்திரமாய்
பாதுகாத்து வைத்திருக்கிறேன்..

நீ திரும்பி வரும்பொழுது
திருப்பி உனக்கே கொடுக்க…

விடைகளில்லா கேள்விகள்…

காய்ச்சிய இரும்பைப்போல்
கருவிழிகளுக்குள் நுழைந்து செல்லும் பார்வைகளை
எங்கிருந்து எடுத்து வந்தாய் ?


மற்றவர்களைப் பார்ப்பதற்கும்
என்னைப் பார்ப்பதற்க்குமென
தனித்தனி பார்வைகளை
எப்படி நீ திரட்டி வைத்தாய் ?


தூரத்தில் நான் வரும்பொழுதே
விழியோரத்தில் பார்த்துவிட்டு
“ஹாய் எப்ப வந்த…” என
எதுவுமே தெரியாததுபோல் கேட்க
எப்பொழுது நீ கற்றுக்கொண்டாய் ?


எதுவும் பேசாமல்
உன்னையே உற்றுப் பார்க்கும்
என்னை நீ மெல்லக் கிள்ளி
“சீ போடா…” எனச் சொல்ல
எங்கிருந்து வெட்கம் எடுத்தாய் ?


கேள்விமேல் கேள்விகள் கேட்டு
நானும் உன்னை நச்சரிக்க
“எல்லாம் உன்னாலதான்…” என்று
என் மார்பில் புதைந்துகொண்டாய் !

ஆறாத தழும்பு…

அன்றொருநாள்
காதலின்வலி உடல்வலியை மிஞ்ச...
ரத்தம் வழிய வழிய
பழைய ஊசியால் கையைக் கிழித்து...
என் முன்னாள் காதலியின் பெயரை
சுகத்தோடு பதிந்துவைத்த
அந்த தழும்பை மெதுவாய் தடவியபடியே…


“இது என்னப்பா…” எனக் கேட்கும்
என் சின்னப்பிள்ளைக்கு
ஒரு பொய்யான புன்னகையைத்தவிர
வேறு எதை நான் பதிலாகத் தரமுடியும்…

Tuesday, August 19, 2008

அழகான ரசிகை...

காதல் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளோடு
என்னருகில் நீ இருக்கின்ற காலங்களில்…
என்னுயிரில் நீ இனிக்கின்ற நேரங்களில்…
உன் வெட்கங்களை மட்டுமல்லாது கோபங்களையும்
புன்னகைகளை மட்டுமல்லாது கண்ணீரையும்
அழகை மட்டுமல்லாது அன்பையும்
அணுவணுவாய் ரசிக்கிறேன் நான் !


ஆனால் நீயோ என்னைப் பார்க்கும்பொழுதெல்லாம்
நானுன் ரசிகை என்கிறாய் !


தீராத பசிகொண்ட என் ரசனைகளுக்கு
திகட்டாத உணவளித்துக் கொண்டிருப்பவள்
நீதான் என்னும் உண்மை
உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை…

Monday, August 18, 2008

நினைவுகளின் மணம்...


உனக்காய் எரிந்துகொண்டிருக்கும் நான்
மெழுகுவர்த்தி அல்ல…ஊதுபத்தி !

எரிந்தாலும் புகைந்தாலும்
கரைந்தாலும் கருகினாலும்
உன் நினைவுகளை மட்டுமே
மணமாகப் பரப்பிக்கொண்டிருக்கிறேன் !

என் எண்ணங்கள் மட்டும்
சாம்பலாய் விழுந்து கிடக்கின்றன
எனக்கான சுவடுகளாய்…

கொஞ்சும் கொலுசு...

பழமையாகவோ கூச்சமாகவோ
அல்லது சிறுபிள்ளைத் தனமாகவோ
எதுவாக வேண்டுமானாலும்
இருந்துவிட்டுப் போகட்டும்…


எனக்காக மீண்டும் அணிந்துகொள்
உன் வெள்ளை வண்ணக் கொலுசை !


அது எப்பொழுதும் உனக்கு
ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கும்…

எனக்கு மட்டுமே தெரிந்த
உனக்குள் இருக்கும் அழகிய குழந்தைத்தனங்களை !

இரவல் கனவுகள்

கஞ்சாச் செடிபோல
இழுக்க இழுக்க போதைதரும்
உன் பெண் வாசத்தில்
கட்டுண்டு போனது
என் ஒட்டுமொத்த ஆணவமும் !


பேர் தெரியாத
இதற்குமுன் அறிந்திராத முகர்ந்திராத
காட்டுப்பூக்களைப்போல
விதவிதமாய் மலர்ந்து சிரிக்கும்
உன் வண்ணப் புன்னகைகளை
நிரப்பி அலைகிறது என் ஞாபகம் !


யாருமற்ற ஒத்தையடிப் பாதைகளாய்
வளைந்து நெளியும்
உன் உள்ளங்கை ரேகைகளுக்குள்
சத்தமின்றி தனிமையில்
பயணிக்கிறது என் இதயம் !


உன்னை எதிரில் காணுகிற
வேளைகளில் எல்லாம்
சிறகுகள் முளைத்துவிடுகிறது
என் இமைகளுக்கு !


நதியில் நகர்கின்ற படகைப்போல்
உன் அழகில் மெதுவாய்
மிதந்தபடி இருக்கின்றன..

எனது இரவுகளுக்காக
உன்னிடம் நான்
கடன் வாங்கி வைத்திருக்கும்
இரவல் கனவுகள் !

மொழிகள் தீண்டா வயது...

இடைவெளி இல்லாது
நகர்ந்துகொண்டிருக்கும்
நாட்களுக்கிடையில் தொலைந்துபோன
என் சின்னச் சின்ன சந்தோசங்களைக்கூட
முழுதாய் மீட்டுத் தரமுடிகிறது
ஒரு குழந்தையால்…


இன்னும் மொழிகளின்
வட்டத்திற்குள் விழுந்துவிடாமல்
வெறும் சத்தங்களாலும் அழுகைகளாலும்
பல் முளைக்காத பொக்கைவாய் சிரிப்புகளாலும்
இந்த உலகத்தையே
புரட்டிப்போட தெரிகிறது அதற்கு !


நடக்கத் தெரியாத போதிலும்
தவழ்ந்தே வீட்டைச் சுற்றிவரும்
அதன் கைகளில் கிடைப்பதெல்லாம் வாய்க்குத்தான் !


ஆடியாடி பசித்து புசித்து
ஓய்ந்து என் மடியில்
சட்டென தூங்கிப்போகும் வேளைகளில்
பெருமழை பெய்து
நின்றதைப் போலிருக்கும் !


குட்டிப் பூப்போல
என்மீது தூங்கும்போதில்
கனவு கண்டு சிரிக்கும்..
இந்த வயதில் அதன் கனவுக்குள்
யார் வந்திருக்க முடியும்
கடவுளைத் தவிர…

என்ன சுதந்திரம்...

பக்கத்து வீட்டு வேப்பமரக்கிளை
தினமும் தன் வீட்டில்
இலைகள் உதிர்ப்பதற்க்காய்
மரத்தையே வெட்டச் சொல்லி
தெலுங்கு குடும்பத்துடன் சண்டையிட்டு…


எதிர் வீட்டு மலையாளிப் பெண்ணும்
அடுத்தத்தெரு கன்னடப் பையனும்
நட்பாய் இருப்பதை
நாலுபேரிடம் கொச்சைப்படுத்தி…


புட்டு விற்கும் பாட்டியம்மாவிடம்
மூன்று ரூபாய்க்கு பேரம்பேசி
முன்னூறு ரூபாய் பிட்சா வாங்கி
தின்னமுடியாமல் வீணாக்கி…


சாலை சிக்னல்களில் நிற்காமல்…
ஒன்-வேயில் ஹெல்மெட் இல்லாமல்
திரிபில்ஸ் போய்…

நோ பார்க்கிங்கில் வண்டி நிறுத்தி…


ஹிந்து சாமியார்களை காமவாதிகளாக்கி…
கிருஸ்தவர்கள் மதம் மாற்ற முயற்சிப்பவர்கள் எனச்சொல்லி…
முஸ்லிம்களா ஐயோ தீவிரவாதிகள் என கதைகட்டி…


லஞ்சம் கொடுத்து வேலை வாங்கி…
அங்கும் இங்கும் போட்டுக் கொடுத்து…


கடன் கொடுத்தவன் செத்தால் சந்தோசப்பட்டு…
புறம்போக்கு நிலங்களை வளைத்துப் போட்டு…
இஷ்டத்திற்கு பொய்கள் அவிழ்த்து…


கடுகை மலையாக்கி…
மலையை கடுகாக்கி…


தொட்டதுக்கெல்லாம் வியாக்கியானம் பேசி…
எல்லாரையும் குறை கூறி…
எதற்க்கெடுத்தாலும் சலித்து…


இறுதியாக டீக்கடை பெஞ்சில்…
“என்ன சுதந்திரம் வாங்கி என்னப்பா புண்ணியம்…
நாடு ரொம்ப கேட்டுப் போச்சு !!!!” என
சத்தம் போட்டு பேசி கலைந்து செல்வான்
நம் இந்தியக் குடிமகன்
சங்கடம் ஏதுமின்றி…
கொஞ்சம்கூட கூச்சமின்றி…

நீ எப்பொழுதும் இப்படித்தான்…

மெல்லிய காற்று மெதுவாக
பூக்களை திறப்பதைப்போல
ரகசிய முத்தங்கள் வைத்து
என் ஆசைகளை திறந்துவிடுவாய் !


வெள்ளைப் பனித்துளியை
மெல்ல உறிஞ்சும் சூரியன்போல
மௌனத்தை முகத்தில் பூசி
என் வார்த்தைகளை திருடிச் செல்வாய் !


ஈர மரக்கிளை மெதுவாய்
இலைகளை அவிழ்ப்பதுபோல
உன் விரல்களால்
என் உள்ளங்கைக்குள் பயணித்து
வெட்கங்களை விரட்டியடிப்பாய் !


சில்லென்ற காற்றுப் பட்டு
சீக்கிரம் விழிப்பதைப்போல
சட்டென்று கையைவிட்டு
தூரத்தில் தள்ளி நிற்பாய் !


சூடான நெருப்புப்பொறி
தேகத்தில் விழுந்ததைப்போல
விலகுதல் தாங்காமல்
மீண்டும்வந்து கட்டிக்கொள்வாய் !


அத்தனையும் பார்த்தபடி
அசையாது நின்றிருக்கும்
ஆளுயரக் கண்ணாடிதான்
காட்டிக்கொடுக்கும்
ஐயோ உன் குறும்புகளை…


எனக்குத் தெரியும்
நீ எப்பொழுதும் இப்படித்தான்…

நிறுத்திய துடிப்புகள்...

என் மார்பில் நீ கன்னம் வைத்து
தூங்கிப்போகும் வேளைகளில் எல்லாம்
என் இதயத்துடிப்புகளையும்
நிறுத்தி வைக்கிறேன்…


அந்த மெல்லிய சத்தத்தில்
நீ விழித்துவிடக்கூடாது என்பதற்காக !


ஒரு சின்னப் பிள்ளைபோல
உன் மடியில் முகம் புதைத்து
அழவேண்டுமென ஆசையாய் இருக்கிறது…


அதற்கான சோகங்களைத்தான்
தேடிக்கொண்டிருக்கிறேன்…

ஏன் அழுகிறாய் எனக் கேட்கும்
உனக்கு ஏதாவது பதில்சொல்லவேண்டுமே…

மௌனக் கூச்சலிடும் மனது…

ஒரு பெண்மைக்கே உரிய நளினத்தோடு
நீள்கின்ற பேச்சுக்கிடையில்
அனிச்சையாய் நீ உன்ஆடைகளை சரிசெய்யும்பொழுது…

மௌனக் கூச்சலிடும் எனது மனது…


ஒரு குழந்தை கதை சொல்வதைப்போல
கண்களை அகல விரித்து
கைகளை ஆட்டி ஆட்டி
நீ பேசும்பொழுது…

மௌனக் கூச்சலிடும் எனது மனது…


சில நாட்கள் உன்னைப் பாராமல்
வாடி இருந்து
பார்ப்பதற்காய் காத்திருக்கையில்
தூரத்தில் உன்னை பார்த்தவுடனே…

மௌனக் கூச்சலிடும் எனது மனது…


ஒரு மழைநாளில் மெல்லிய குளிரில்
சிந்தும் தூறல்களை பிடித்து விளையாடியபடியே
என் குடைக்குள் நெருக்கமாய்
நீ நடந்துவரும் பொழுதில்…

மௌனக் கூச்சலிடும் எனது மனது…


வார்த்தைகள் முழுக்க தீர்ந்துபோய்
பார்வைகள் மட்டும் பரிமாறிக்கொண்டிருக்கும்
அந்த மோனநிலை நிமிடங்களில் எல்லாம்…

மௌனக் கூச்சலிடும் எனது மனது…

ஒற்றை முத்தம்....

ஒரு வைரமூக்குத்தியைப்போல
உன் முத்தங்களை எல்லாம்
என் மனப்பெட்டிக்குள்
பத்திரமாய் சேமித்துவைக்கிறேன் என்கிறாய்...


ஐயோ... ஐயோ...
நூறு வைரமூக்குத்திகளைவிட
உன் ஒற்றைமுத்தம்
எனக்கு பெரியதென தெரியாதா உனக்கு !

மாய பம்பரம்...

எத்தனைமுறை பார்த்தாலும்
ஒன்றை மற்றொன்றாய்
மாற்றிக்காட்டாத கண்ணாடியைப்போல்…


பார்க்கின்ற அத்தனைமுறையும்
என் அணுக்களின் நடுவில்
மாய பம்பரம் சுழற்றும் உன் கண்கள் !

சூட்சுமப் பெருவெளி...

ஏகாந்தம் சூழ்ந்த
எல்லையற்ற சூட்சுமப் பெருவெளிக்குள்
என்னை வீசி எறிந்தது காலம் !


வார்த்தைகளற்ற பரிபாஷைகளோடு
நீள்கின்ற மௌனத்தின்
உரையாடல்களுக்கு மத்தியில்
மதில்சுவர் எழுப்பிக்கொண்டிருக்கின்றன
மங்காத நினைவுகள் !


கருவறையின் கதகதப்பிற்கும்
கல்லறையின் வெதுவெதுப்பிற்கும் இடையில்
நடப்பதென்ன என்பதை அறியாமல்…
கண்டும் காணாத
இருந்தும் இல்லாத ஒன்றை
உணர்ந்தும் உணராமல்
தெரிந்தும் தெரியாமல்
தேடி அலைகிறது…

புதிர்கள் நிறைந்த புதையலைப் போன்ற
யார் வசமுமில்லாத என் வாழ்க்கை !


புத்தக மூட்டைக்குள்
நெளியும் அந்துப்பூச்சிகளாய்
மெல்ல மெல்ல உயிரைக் கடித்துத் தின்றபடியே…

ஏகாந்தம் சூழ்ந்த
எல்லையற்ற சூட்சுமப் பெருவெளிக்குள்
என்னை வீசி எறிந்தது காலம் !

ஆழமான புரிதல்கள்...

சில சமயங்களில்
நீ கோவிலுக்குப் போகலாம் வா.. என
ஆசையோடு அழைக்கும் நேரங்களில்
இன்னும் ரெண்டு மூணு நாளைக்கு வேண்டாமே…
எனச் சொல்லும் என் வார்த்தைகள் முடிவதற்குள்…


“ரொம்ப வலிக்குதாம்மா…”எனக் கேட்கும்
வாஞ்சையான உன் அக்கறையில் நிறைந்திருக்கிறது…

பெண்மையின் மீதும்…
என் மீதும்…
நீ கொண்ட ஆழமான புரிதல்கள் !

உடைந்துவிழும் பெண்மை...

அணைக்கும்பொழுது திமிறியதில்
அழுத்தி உடைந்துவிட்ட
என் கண்ணாடி வளையல்களை
ஒன்றுக்கு பத்தாய் வாங்கித்தருகிறேன் என்கிறாய் !


உன் ஒவ்வொரு அணைப்பின்பொழுதும்
சுக்குநூறாய் உடைந்துவிழும்
என் வெட்கம் கலந்த பெண்மைக்கு பதிலாய்
எதை வாங்கித் தருவாய் !

தொலைந்த முத்தங்கள்...

மார்போடு சேர்த்தணைத்து
இறுக்கும் உன் விரல்களால்
நீ கலைத்துப்போட்ட என் கூந்தலுக்குள்
சில ரகசிய முத்தங்கள்
தொலைந்து போயிருக்கலாம்…


உன் பிடியில் இருந்து
என்னை விடுவிக்கும்பொழுது
அவற்றை மறக்காமல் எடுத்துக்கொள் !
முடிந்தால்... என் உதடுகளுக்கு கொடுத்துச் செல் !

பொய்யும் மெய்யும்...

மாலைநேரக் கடற்கரையில்
மணலோடு சேர்த்து
காதல் என்னும் பெயர் பூசிக்கொண்டு…

படகோரங்களிலும் குடைகளுக்குள்ளும் புதைந்துகொண்டு
உடல்கள் இறுகிக்கிடக்கும் ஜோடிகளுக்கு மத்தியில்…


வீட்டிற்கு எடுத்துச்செல்லமுடியாதென தெரிந்தும்
சின்னப்பிள்ளை போல ஓடியோடி
கிளிஞ்சல்கள் பொறுக்கி
விளையாடிக்கொண்டிருக்கும் என்னை…


தூரத்தில் தனியே அமர்ந்தபடி
ரசித்துக்கொண்டிருக்கும் உன்னை…

உன் காதலின் ஆழத்தை…
என் காதலின் நீளத்தோடு அன்றி
வேறு எதனோடு நான் ஒப்பிட முடியும் !

நிறைந்த நிமிடங்கள்...

ஒரு அழகிய தேவதையைப்போல
குட்டிக் குழந்தையைப்போல
நீ என்னருகில் தூங்கும் நிமிடங்களில் எல்லாம்…


கண்கள் இருப்பதற்காகவும்
காதலிக்க தெரிந்ததற்க்காகவும்
நன்றி சொல்லிக்கொள்கிறேன் கடவுளுக்கு !

Sunday, August 17, 2008

ஊடல்...

உன் கண்களில் இருந்து உடைந்துவிழும்
ஒவ்வொருத்துளி கண்ணீருக்குள்ளும்
நெருப்பாய் எரிந்துகொண்டிருக்கிறது
நமது நேற்றைய ஞாபகங்கள் !


முற்றிப்போய் முட்டிக்கொண்ட
நமது சண்டைகளுக்குள்
ஒன்றும் பேசாமல் ஒளிந்துகொண்டிருக்கிறது
நமக்கான காதல் !

அழகிய பிராத்தனைகள்...

இமைகள் இரண்டையும்
இறுக்க மூடிக்கொண்டு
மெல்லிய இதழ்களை மெதுவாய் அசைத்தபடி…


நீ முனுமுனுக்கும்
பிராத்தனைகளை கேட்பதற்காகவே
கோவில் கருவறையில் காத்திருக்கிறது கடவுள் !

கரைந்த நிமிடங்கள்...


நாள் முழுக்க பேசிக்கொண்டு
பக்கத்திலேயே இருந்த பிறகும்
விடைபெறும் சமயத்தில்
என் கைகைளை இறுகப் பற்றிக்கொள்வாயே…


அந்த ஒருநொடியில்
ஒட்டுமொத்தமாய் கரைந்துபோனது
இதுவரை கடந்த அத்தனை நிமிடங்களும் !


இன்னும் கொஞ்சநேரம்
இப்படியே கையை பற்றிக்கொண்டு இருப்பாயா
என மனம் ஏங்கினாலும்…


“சரி நேரமாயிடுச்சு கிளம்பட்டுமா… “என கேட்கும்
என் பொய்யான உதடுகளை என்ன செய்ய !

முத்த சாட்சி...

நெற்றிப்பொட்டில் ஒற்றை முத்தம்
நேற்று நீயும் வைத்ததற்கு
சாலையோர விளக்கு மட்டும் சாட்சி…


இமைகள் மூடிக்கொண்டபின்னும்
விழியை விட்டு அகலவில்லை
இன்னும் அந்த வெட்கம் தின்னும் காட்சி !

உனக்கான தூக்கம்...

எனது இரவுகளுக்கு சிறகுகள் முளைத்து
பல நாட்கள் ஆகிவிட்டன !

ஆனாலும் அவை இதுநாள்வரை
பறக்க முயற்சித்ததில்லை !

உந்தன் அறிமுகத்திற்கு பிறகோ
அவை பறப்பதை நிறுத்தவே இல்லை !

இப்பொழுதும்கூட அவை
என் உறக்கத்தை திருடிக்கொண்டு வந்து
உன்னிடம் கொடுத்துக்கொண்டிருக்கிறது பார் !

எனக்கும் சேர்த்து நீயாவது தூங்கு…
உனக்கும் சேர்த்து விழித்துக்கொண்டிருக்கிறேன் நான் !

அழகின் வெளிச்சம்...

நீ சூரியன் என்று மாறிவிட்டாய்…
பூமியாய் எப்போதும் உன்னையே
சுற்றிச் சுற்றி வருவதே
எனக்கு போதுமானதாக இருக்கிறது !


உன்னை நெருங்கவும் முடியாமல்
விலகவும் இயலாமல்
ஒரு எண்ணக்கோட்டுக்குள்
அந்த எல்லைக்கோட்டுக்குள்
உனையே சுற்றி வருகிறேன் !


சில பாதி பகல் சில பாதி இரவு
மாறி மாறி நடக்கிறது என்னுள் !


உனக்கான நினைவுகளை எல்லாம்
சந்திரக் கூட்டினுள் சேமித்து வைக்கிறேன் பத்திரமாய் !


உன் அழகின் வெளிச்சம் பட்டுப் பட்டு
இப்பொழுதெல்லாம் இப்படித்தான்
ஒளிவெள்ளம் வழிய
வாழ்ந்துகொண்டிருக்கிறேன் நான் உன்னால் !

Wednesday, August 13, 2008

நிஜமான கற்பனை...


எத்தனையோ பேர்
வந்துபோகையிலும் தங்கிப்போகையிலும்
அமைதியாய் இருந்த என் இல்லம்...


நான் தனிமையில் இருக்கையில் மட்டும்
என்றோ நீ என்னுடன் இருந்த
காட்சிகளை எல்லாம்
கண்முன்னே அரங்கேற்றுகிறது !


என் அறைகள் முழுவதும்
நிறையும் உன் வாசத்தை
நினைவுகளில் சுமந்தபடியே
அமைதியாய் அமர்ந்திருக்கிறேன்
அசைவுகள் ஏதுமின்றி...


அடிக்கடி எனக்குமட்டும்
கேட்கின்ற உன் சிரிப்பு சத்தங்களும்
நீ அன்போடு என்னை அழைக்கின்ற
அந்த சத்தமும்
இப்பொழுதெல்லாம் எனக்கு பழகிவிட்டது !


ஒருவேளை நீ நிஜத்தில்
என்முன் வந்து நின்றாலும்
பேசினாலும்கூட
இதுவும் கற்பனை என்று
நான் உன்னைக் கடந்துபோகக்கூடும்
எச்சரிக்கையாய் இரு...

வெயிலின் பயணம்...

வண்ணக் கதிர் வானம் விலகிட
வண்டித் தடம் பதிந்து வழிமாறும்
வெயிலின் பயணம் !

மஞ்சள் பூசும்
மாலைநேர மரயிடுக்குகளில்
மெல்ல வழிந்துகொண்டிருக்கும்
இருளின் ஜனனம் !

தட்டுத் தடுமாறி
விட்ட இடம்தேடி
அலைந்துகொண்டிருக்கும்
சில பறவைக்கூட்டம் !

இல்லம் சேர விரைந்துகொண்டிருக்கும்
வண்டி மாடுகளோடு...

அவைகளின் மணியோசைகளுக்கு
அழகாய் தலையாட்டியபடி...

இருட்டும் சேர்ந்து அமர்ந்து
பயணம் செய்துகொண்டிருக்கும்...

ஒளிவீசிக்கொண்டிருக்கும்
அந்த சிவந்த லாந்தர் விளக்கை
முறைத்தபடியே...

எதிர்பாரா தருணத்தில்...


எதிர்பாராமல் என்னைக்கண்டு...

ஆச்சர்யத்தில் விரியும்
உன் அகண்ட விழிகளில்
அடக்க முடியாத
சந்தோசத்தை நிரப்பிக்கொண்டு...

மலர்ந்திருக்கும் மகிழ்ச்சியை
மனதிற்குள் மறைத்துக்கொண்டு...

இயல்பாய் கேட்பதுபோல
"என்ன இந்த பக்கம்..." என்கிறாய் !

நான் உன் முகத்தையே
உற்றுப்பார்க்க...

வெட்கம் சிந்தும் சிரிப்புடன்
சட்டென வேறுபக்கம் திரும்பிக் கொள்கிறாய்...

அடியே...
நீ திரும்பிய திசையெங்கும்
திணறிச் சிதறுகிறது
என் நீ கொண்ட காதல் !

காதலியின் கோலம்....



பனித்துளிகளை வாரி இறைத்து
உடல் நனைய உடை உடுத்தி
குளித்த வாசனையுடன்
நீ வாசலில் இடும்
கோலத்தைக் காணவே
சீக்கிரமாய் வந்துவிடுகிறது
சில்லென்ற விடியல்...


நிலவினை அரைத்து
நீள்வட்டக் கோடுகள் ஆக்கி
விண்மீன்கள் பறித்து
புள்ளிகளாய் வைக்கிறாய்
கோலத்தில்....

ஒன்றும் இல்லை வானத்தில் !

பிரியமானவர்களுக்கு பிரியனின் வணக்கங்கள்...

ஒரு படைப்பாளியாக தங்களை எனது பக்கங்களுக்கு வரவேற்கிறேன்...

கவிதைகளின் பல முகங்களையும், இலக்கியத்தின் பல தடங்களையும், தமிழ் திரைப்படத்துறை பாடல்களின் பல பரிமாணங்களையும் பகிர்ந்துகொள்ள இருக்கும் இந்த களத்தில்...


தங்களின் கருத்துக்களும் விமர்சனங்களும் பக்க பலமாக இருக்கும் எனும் நம்பிக்கையோடு...

பிரியமுடன்...
பிரியன்...